வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 160 கிலோ கிராம் எடை கொண்ட கடல் ஆமை!
மன்னாரில் வீடொன்றில் கயிற்றால் கட்டி உயிருடன் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 160 கிலோ கிராம் எடை கொண்ட அரிய வகை கடல் ஆமையை கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மீட்டுள்ளனர்.
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்கட்டிக்கொட்டுப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடலாமை மறைத்து வைக்கப் பட்டுள்ளதாக விசேட அதிரடிப் படையினருக்கு ரகசிய தகவல் வழங்கப்பட்டது.
குறித்த தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினர் உரிய அதிகாரிகளுடன் சென்று கடந்த வியாழக்கிழமை மாலை (27) குறித்த ஆமையை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட கடலாமை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட கடலாமையின் உடலில் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அதற்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்ததாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த கடலாமையை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த வீட்டின் உரிமையாளர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.