இரணைதீவு வட்டாரக் கிளைத் தெரிவு, இன நல்லிணக்கத்தின் தொடக்கப் புள்ளி என சிறீதரன் எம்பி தெரிவிப்பு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இரணைதீவு வட்டாரக் கிளைக்கான வருடாந்த பொதுக்கூட்டமும், புதிய நிருவாகத் தெரிவும் நேற்றைய தினம் (01), பூநகரி பிரதேச சபையின் மேனாள் தவிசாளர் திரு.சிவகுமாரன் ஸ்ரீரஞ்சன் அவர்களின் தலைமையில், நாச்சிக்குடாவில் நடைபெற்றுள்ளது.
இதன்போது வட்டாரக் கிளையின் புதிய தலைவராக அப்பகுதி முஸ்லிம் மக்களின் பிரதிநிதியான திரு.முகமதுமீரா சாய் சலீம் அவர்கள் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை அப்பிரதேசத்தில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் இன நல்லிணக்கத்துக்கான அடையாளமாக அமைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இரணைதீவு, இரணைமாதாநகர், நாச்சிக்குடா, நாச்சிக்குடா மத்தி, நாவாந்துறை, ஜேம்ஸ்புரம், கரடிக்குன்று ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஆதரவாளர்கள் பலரும் பங்கேற்றிருந்த இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த கூட்டத்தில் பூநகரி பிரதேச சபையின் மேனாள் உபதவிசாளர் திரு.முடியப்பு எமிலியாம்பிள்ளை, கட்சியின் இரணைதீவு வட்டார உறுப்பினர்களான திரு.செபமாலை புஸ்பராசா, திருமதி.அனற் ஜெனதாஸ் மற்றும் இக்கூட்டத்துக்கான இணைப்பாளரான திரு.சந்தியோகு அலன்டீலன் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.