பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அமளி துமளியுடன் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுகூட்டம்
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுகூட்டம் இன்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அமளிதுமளிகளுக்கு மத்தியில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இன்றைய தினம் உ பாதுகாப்புக்காக பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன் பலத்த பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது.
இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுகூட்டம் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் தலைமையிலும் இணைத்தலைவர்களான கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான்,அமைச்சர் ஹாபீஸ் நசீர்அகமட் ஆகியோரின் பங்குபற்றுதலுடனும் ஆரம்பமானது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன்,கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் கிழக்கு மாகாணசபையின் பிரதம செயலாளர்,அமைச்சுகளின் செயலாளர்கள்,பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.
இதன்போது கூட்டத்தின் ஆரம்பத்தின் தலைமையிரையினை மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உரையாற்றிய பின்னர் அமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் அவர்கள் உரையாற்றியபோது அவர் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் கல்வி திணைக்களம் தொடர்பில் பல்வேறு கேள்விகளை முன்வைத்த நிலையில் அங்கு கிழக்கு மாகாண ஆளுனருக்கும் அமைச்சருக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டன.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் மக்களின் பிரச்சினையை பேசும் இடம் ஆனால் அமைச்சர் அவர்கள் தமது தனிப்பட்ட அரசியல் பிரச்சினையை தீர்க்கமுனைவதாகவும் உடனடியாக இதினை நிறுத்தி மாவட்ட அபிவிருத்திக்குழு செயற்பாடுகளை முன்னெடுக்கமாறு கருத்துகளை முன்வைத்த நிலையில் தொடர்ந்து மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி சார்ந்த செயற்பாடுகள் தொடர்பான விளக்கமளிக்கப்பட்டதுடன் புதிய திட்டங்களுக்கான அனுமதிகளும் வழங்கப்பட்டதுடன் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை விரைவுபடுத்துமாறு கோரப்பட்டது.
இதன்போது ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்களில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் குறித்து இங்கு இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனால் சுட்டிக்காட்டப்பட்டது.குறித்த செயற்பாடுகளை சீர்படுத்தி தொடர்ந்து வேலைத்திட்டங்களை முன்கொண்டுசெலவ்து குறித்து ஆராயப்பட்டது.
அத்துடன் ஏறாவூர் நகரசபைக்குட்பட்ட ஏறாவூர் ஐந்தாம் குறிச்சியில் உள்ள சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கு இதுவரையில் அவர்கள் குடியிருக்கும் காணிக்கான உரிமம் வழங்கப்படாமை குறித்து இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.1944ஆம் ஆண்டு தொடக்கம் நகர சுத்திகரிப்பாளர்கள் மிகவும் குறுகிய நிலப்பரப்பில் லயன்போன்ற குடியிருப்புகளில் வாழ்ந்துவருவதாகவும் இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் அவர்களுக்கான உரிமம் வழங்கப்பட்டுள்ள நிலையில் ஏறாவூர் நகரசபையில் கடமையாற்றும் சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கு இதுவரையில் உரிமம் வழங்கப்படாமை குறித்து இங்கு கவனத்திற்கு இராஜாங்க அமைச்சர் கொண்டுவந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளரை ஆராய்ந்து சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட வகையில் நடவடிகையெடுக்குமாறு பணிக்கப்பட்டது.
இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதுடன் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் சந்திரகாந்தனுக்கும் இடையே வாய்த்தர்க்கங்களும் கருத்து மோதல்களும் இடம்பெற்றன.சாணக்கியன் அவர்கள் வீடியோ ஒன்றை ஒளிபரப்புமாறு கோரியபோது அவ்வாறு செய்யமுடியாது சந்திரகாந்தன் தெரிவித்த நிலையில் அரசாங்க அமைச்சர் ஒருவருக்கு ஒளிபரப்பமுடியும் என்றால் ஏன் எங்களது வீடியோவினை ஒளிபரப்பமுடியாது என்று கோரிய நிலையில் இருவருக்கும் இடையே கருத்துமோதல்கள் ஏற்பட்டன.
எவ்வாறாயினும் கருத்து மோதல்களுக்கு அப்பால் பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதுடன் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதுடன் தீர்மானம் எடுக்காத விடயங்களுக்கு தனியான கூட்டங்களை நடாத்தி தீர்வுகாண்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.