காண்போர் கண்களை குளிரவைத்த மது எடுத்தல் விழா
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள மேற்பனைக்காடு கிராமத்தின் காவல் தெய்வமாக வடக்குத் திசையில் கல்லனைக் கால்வாயின் கரையில் வீரமாகாளியம்மன் அருள்பாளித்து வருகிறார்.
இந்தக் கோவிலில் கடந்த புதன் கிழமை நவதானியங்களை முளைக்க வைத்து முளைப்பாரி எடுத்து வந்து பெண்கள் வழிபாட்டில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து இன்று மேற்பனைக்காடு கிராமத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள பெண்கள் நல்ல மழைப் பொழிவு வேண்டியும், இப்பகுதியின் பிரதான விவசாயமான தென்னை விவசாயம் செழிக்க வேண்டியும், ஊர் நலம் பெற வேண்டியும் மது எடுக்கும் திருவிழா நடைபெற்றது.
மது எடுத்தலின் போது, புதிதாக முளை விட்ட தென்னம்பாலையை வெட்டி நெல் நிரப்பிய குடத்தின் மீது தென்னம்பாலையை வைத்து, அந்த குடத்தை அலங்கரித்து ஊர்வலமாக பெண்கள் சுமந்து வந்து கௌவில் வளாகத்தில் கொட்டி அம்மனிடம் வழிபாட்டில் ஈடுபட்டனர்.
இந்த ஊர்வலத்தின் போது பாரம்பரிய முறைப்படி பெண்கள் கும்மியடித்து குழவையிட்டு உற்சாகமாக அம்மனை தரிசித்தனர்.