271 ஓட்டங்கள் முன்னிலையுடன் டிக்ளேர் செய்த இந்தியா அணி
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் டொமினிகாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட், சிராஜ், ஷர்துல் தாக்குர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா பொறுப்புடன் ஆடி சதமடித்தனர்.
ரோகித் சர்மா 103 ரன்னில் அவுட்டானார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 229 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்து இறங்கிய சுப்மான் கில் 5 ரன்னில் அவுட்டானார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 2 விக்கெட்டுக்கு 312 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் 143 ரன்னும், விராட் கோலி 36 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்நிலையில், 3ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் 171 ரன்னில் அவுட்டானார். 3வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால், விராட் கோலி ஜோடி 110 ரன்கள் எடுத்தது.
அடுத்து இறங்கிய ரகானே 3 ரன்னில் ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய விராட் கோலி அரை சதமடித்து 76 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 421 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி 271 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.