மைத்திரிக்கு புதன்கிழமை வரை மட்டுமே கால அவகாசம்
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலைத் தடுக்கத் தவறியமைக்காக நட்டஈடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும் புதன்கிழமை (12) நிறைவடையவுள்ளது.
கடந்த ஜனவரி 12ஆம் திகதி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் நான்கு பிரதிவாதிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதன்படி, முன்னாள் ஜனாதிபதிக்கு 100 மில்லியன் ரூபாவும், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன ஆகியோருக்கு தலா 75 மில்லியன் ரூபாவும் நட்டஈடாக வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்போது, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக அப்போது கடமையாற்றிய ஹேமசிறி பெர்னாண்டோவுக்கும் 50 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு உத்தரவிடப்பட்டது.
மேலும், முன்னாள் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸ் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் 10 மில்லியன் ரூபாவை செலுத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுதாரர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக அறிவித்து, அந்தந்த பிரதிவாதிகளுக்கு இழப்பீடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2009 இல் இலங்கையில் நடைபெற்ற முப்பது வருட உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பின்னர் 2019 ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் இலங்கையில் நடந்த மிக மோசமான தாக்குதல் என்று அழைக்கப்படலாம்.
மூன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் மூன்று சொகுசு ஹோட்டல்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 270 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 500 பேர் காயமடைந்தனர்.