இலங்கை கல்வி அமைச்சர் விடுத்த விசேட அறிவிப்பு
இலங்கையில் ஆசிரியர்களின் இடமாற்றங்கள் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் பாதிப்புகளை ஏற்படுத்துமாயின், அவ்வாறான இடமாற்றங்கள் மேலும் ஒத்திவைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த நேற்று இதனை தெரிவித்தார்.
ஆசிரியர் இடமாற்றங்களினால் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு பாரியளவு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
ஆசிரியர் இடமாற்றப் பிரச்சினைக்கு தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. பத்து வருடங்களுக்கு மேலாக ஒரே பாடசாலையில் பணிபுரியும் சுமார் ஆயிரம் ஆசிரியர்கள் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் இடமாற்றங்களினால் மாணவர்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமாயின், அவ்வாறான இடமாற்றங்கள் மேலும் ஒத்திவைக்கப்படும். எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சை அல்லது உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கே இவ்வாறு இடமாற்றங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆசிரியர் இடமாற்றங்கள், பாடத்திற்கு ஏற்ப முறையான முறையில் மேற்கொள்ளப்படும். 10 வருடங்களுக்கு மேலாக ஒரே பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்காகவே இந்த ஆசிரியர் இடமாற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதன்படி 8,893 ஆசிரியர்களுக்கு இவ்வாறு இடமாற்றங்கள் வழங்கப்படவுள்ளன. அவர்களில் 681 பேர் ஆரம்பப் பிரிவு ஆசிரியர்கள். அதில் 388 கடிதங்கள் ஏற்கனவே தபாலில் அனுப்பப்பட்டுள்ளன. மீதமாக உள்ள 293 கடிதங்களையும் இன்று தபாலிட உள்ளோம். ஏனைய கடிதங்களை ஏப்ரல் விடுமுறைக்குப் பின்னர், தபாலில் அனுப்ப எதிர்பார்த்துள்ளோம் என்றும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.