அமைச்சரை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது; மு.க.ஸ்டாலின்
தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அமைச்சரை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது. ஆளுநர் அறிவிப்பை நாங்கள் சட்டரீதியாக எதிர்கொள்வோம்” என்றார்.
தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைமை செய்தி தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், “தொடர்ந்து ஆளுநர் அரசியல் சட்டத்துக்கு எதிராக செயல்படுகிறார். ஆர்.எஸ்.எஸ். தொண்டர் போல் ஆளுநர் செயல்படுகிறார். ஒரு அமைச்சரை நீக்கவோ, சேர்க்கவோ முதலமைச்சரால்தான் முடியும்.
தற்போது ஒரு அமைச்சரை நீக்கியுள்ள ஆளுநரால் ஒருவரை அமைச்சராக சேர்க்க முடியுமா?” எனக் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேபோல் விசிக தலைவர் திருமாவளவன், “ஆளுநரின் செயல் சரியான மனநலம் உள்ளவர் செய்யும் செயலாக இல்லை. ஆர்.எஸ்.எஸ். கைப்பாவையாக ஆளுநர் செயல்படுகிறார்.
அத்துமீறி ஆளுநர் செயல்படுகிறார்” எனக் கூறியுள்ளார். ஆளுநரின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முத்தரசன், “ஆளுநர் சர்வாதிகாரிபோல் செயல்படுகிறார். ஆளுநரின் செயல் சரியான மனநலம் உள்ளவர் செய்யும் செயலாக இல்லை” என்றார்.