விமானிகளின் சம்பளம் குறித்து கரிசனை கொள்ளுமாறு வலியுறுத்தல்!
விமானிகள் பற்றாக்குறை மற்றும் சேவையிலுள்ள விமானிகளுக்கு போதியளவு சம்பளம் வழங்கப்படாமை குறித்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை விமானிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் விமானிகள் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், “தற்போது இலங்கை விமான சேவைக்கு 330 விமானிகள் தேவைப்படுகின்றனர். எவ்வாறிருப்பினும் கடந்த ஆண்டு 70க்கும் மேற்பட்ட விமானிகள் சேவையிலிருந்து இடை விலகியமையால் தற்போது விமானிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக உரிய நேரத்தில் சேவைகளை முன்னெடுப்பதில் எழுந்துள்ள சிக்கலால், விமான பயணிகளான மக்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு இலங்கை விமான சேவையானது துறைசார் நிபுணத்துவத்துக்கு பொருத்தமான சம்பளத்தை விட குறைவான சம்பளத்தையே வழங்குகின்றது.
கொவிட் நெருக்கடியின் பின்னர் சம்பளம் 50 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளது. எனவே தற்போது நிலவும் விமானிகள் பற்றாக்குறை மற்றும் சேவையிலுள்ள விமானிகளுக்கான சம்பளம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.