மொத்த குடும்பத்தையும் கொன்றுவிட்டு… எச்சரிக்கை கடிதம் ஒன்றை விட்டு சென்ற கடத்தல் குழு
மெக்சிகோ நாட்டில் போதைப்பொருள் கடத்தல் குழு ஒன்று, ஒரு குடும்பத்தை மொத்தமாக சிதைத்து, அவர்களின் வெட்டப்பட்ட தலைகளுக்கு அருகே எச்சரிக்கை கடிதம் ஒன்றையும் விட்டுச் சென்றுள்ளது.
மெக்சிகோவில் Chilpancingo நகரில் கடந்த வாரம் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சுமார் 6 நாட்களாக காணாமல் போயுள்ளனர். திடீரென்று காணொளி ஒன்றில் தோன்றிய அவர்கள், தங்களின் கொடூர குற்றங்கள் தொடர்பில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இந்த காணொளியானது சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தது. கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் அவர்கள் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளனர். குறித்த காணொளியானது ஜூன் 15ம் திகதி சமூக ஊடகங்களில் வெளியானது.
அந்த காணொளியில், நால்வர் கொண்ட அந்த குடும்பத்தினருடன், மேலும் மூவர் கைகள் கட்டப்பட்ட நிலையில், முகம் மூடப்பட்டு காணப்பட்டனர். ஆனால் சனிக்கிழமை பகல் அந்த ஏழு பேர்களின் தலையும் வெட்டப்பட்ட நிலையில், கார் ஒன்றின் மீது காணப்பட்டது.
அவர்களின் சடலங்கள், அந்த தெருவின் பல பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில், வெட்டப்பட்ட அந்த தலைகளுடன் நான்கு எச்சரிக்கை கடிதத்தையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.அதில் ஒரு கடிதம் நகர மேயருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை எனவும், ஒரு கடிதம் உள்ளூர் அரசியல்வாதி ஒருவருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை எனவும், மூன்றாவது கடிதம் நகர மேயரை தெரு நாய் என குறிப்பிட்டு எச்சரித்துள்ளனர்.
ஜூன் 9ம் திகதி முதல் நால்வர் கொண்ட அந்த குடும்பம் காணாமல் போயுள்ளது. அவர்களது நண்பர்களும் உறவினர்களும் தீவிரமாக தேடியும் வந்துள்ளனர். ஆனால் இறுதியில் அவர்களின் சடலம் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. அவர்களை போதைப்பொருள் குழு கடத்தி கொலை செய்திருக்கும் என்றே நம்பப்படுகிறது.