எரிபொருளுக்கு தட்டுப்பாடா? – அமைச்சர் விளக்கம்!
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோலியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜிசேகர உறுதியளித்துள்ளார்.
ஒக்டேன் 95 ரக பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகிய நிலையில், அமைச்சர் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் லங்கா-இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் (LIOC) ஆகிய இரண்டிற்கும் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் ஒக்டேன் 95 அல்லது வேறு எந்த பெற்றோலிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் ஒக்டேன் 95 இன் நாளாந்தத் தேவை, 80 – 100 மெட்ரிக் டொன்கள் எனக் குறிப்பிட்டுள்ள அமைச்சர், போதுமான அளவு கையிருப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் வரும் 22 ஆம் திகதி 9000 மெட்ரிக் டன் பெற்றோல் நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.