8 வயது சிறுமி பரிதாபமாக பலி! மருத்துவமனை நிர்வாகமே காரணம் : தாயார் பரபரப்பு குற்றச்சாட்டு
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த சிறுமியொருவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அகல்யா என்ற 8 வயது சிறுமியே உயிரிழந்துள்ளார்.
மருத்துவமனையில் நடந்த அலட்சியமே சிறுமியின் உயிரிழப்புக்கு காரணம் என சிறுமியின் தாயார் குற்றம்சாட்டி உள்ளார்.
அகல்யாவுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிறுநீரக் செயல்பாடு குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் புதுவை, சென்னை, தஞ்சை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிறுமிக்கான சிகிச்சை அவரது பெற்றோர்களான தந்தை ஆனந்தகுமார்-தாய் தீபா ஆகியோர் கொடுத்து வந்துள்ளார்கள்.
ஆனால் குழந்தைக்கு தீவிரமான உயர்சிகிச்சை அளிக்க வேண்டியிருந்ததையடுத்து கடந்த மாதம் 30-ம் திகதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அகல்யாவை அனுமதித்துள்ளனர்..
மருத்துவமனையில் இருமுறை சிறுமி அகல்யாவிற்கு டயாலிசிஸ் செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் வியாழக்கிழமை மதியம் மீண்டும் டயாலிசிஸ் செய்யப்பட்ட பின்னர் சிறுமி அகல்யாவிற்கு இரத்த அழுத்தம் உயர்ந்து வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் பதற்றம் அடைந்த அகல்யாவின் தாய் தீபா, அப்போது அகல்யாவின் படுக்கைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த ஸ்பிரிட்டை தண்ணீர் என நினைத்து சிறுமியிடம் குடிக்க கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் சிறுமி குடிக்கவிலையாம். தண்ணீர் இல்லை என தெரிந்த சிறுமி அதனை உடனே துப்பி இருக்கிறாராம். இதை பார்த்த செவிலியர் அது ஸ்பிரிட் என்பதை கூறியுள்ளார்.
ஆனாலும் சிறுமிக்கு திடீர் உடல் நிலை மோசமடைந்துள்ளது. உடனடியாக அகல்யாவை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்த மருத்துவமனை ஊழியர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி அகல்யா இன்று (வெள்ளிக்கிழமை) பரிதாபமாக உயிரிழந்தார்.
டயாலிசிஸ் அறையில் அலட்சியமாக ஸ்பிரிட் பாட்டிலை வைத்திருந்த காரணத்தால் தான் சிறுமிக்கு இந்த நிலை ஏற்பட்டதாகவும், சிறுமி ஸ்பிரிட்டை முழுமையாக குடிக்காத போதிலும் சிகிச்சை பலன் இன்றி இறந்துபோனதாகவும் தாய் தீபா வேதனையுடன் கூறியுள்ளார்
சிறுமியின் இறப்பு தொடர்பில் தல்லாகுளம் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.