இலங்கைக்கு உதவுவதற்கான வாய்ப்பை தவறவிட்ட ஜி 20 நாடுகள் : சர்வதேச மன்னிப்புசபை அதிருப்தி!
அண்மையில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டத்தில், கடன்நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு உதவுவதற்கான வாய்ப்பு தவறவிடப்பட்டிருப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபையின் உலகளாவிய ஆய்வாளரும் கொள்கை ஆலோசகருமான சன்ஹிதா அம்பாஸ்ற் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் 22 மில்லியன் மக்களின் உரிமைகளில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இலங்கையை இக்கடன்நெருக்கடியிலிருந்து விடுவிப்பது இன்றியமையாததாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
உலகளாவிய பொருளாதாரம் முகங்கொடுத்திருக்கும் சவால்கள் தொடர்பில் கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டத்தில் ஆராயப்பட்டது. இருப்பினும் இதன்போது கடன்நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள நாடொன்றுக்கு உதவுவதற்கான வாய்ப்பு தவறவிடப்பட்டுள்ளது.
குறிப்பாக அக்கூட்டத்தின் இறுதி அறிக்கையில் இலங்கை மக்கள் முகங்கொடுத்திருக்கும் சவால்களுக்குத் தீர்வுகாண்பது குறித்து வெறுமனே மேம்போக்காக மாத்திரமே அவதானம் செலுத்தப்பட்டுள்ளமை மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என மன்னிப்பு சபை சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.