செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் வேலையை பறிக்குமா?
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதலீடோடு OPEN AI என்ற மென்பொருள் நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பரில் Chat GPT-யின் செயற்கை நுண்ணறிவு மென்பொருளை அறிமுகம் செய்தது. அதில் இருந்து இணையஉலகம் Chat GPT-யை பற்றியே தொடர்ந்து பேசி வருகிறது.
Chat GPT மென்பொருள் செயற்கை ரோபோ போல செயல்படும் ஒரு அமைப்பாகும். இதனால் நமது கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும், நம்முடன் உரையாட முடியும், இன்னும் சொல்ல வேண்டும் என்றால் நமது தேவைகளுக்கு ஏற்ப அனைத்து பதில்களையும் Chat GPT-யால் தரமுடியும். அதிலும் கல்வி நிலைய பயன்பாடுகளில் கடிதம் முதல் கட்டுரை வரை அனைத்தையும் இதனால் செய்யமுடியும்.
சுமார் 100 மொழிகளில் Chat GPT மென்பொருள் தற்போது கிடைக்கிறது என்றாலும் ஆங்கிலம் தவிர பிற மொழிகளில் இதன் திறன் சிறப்பாக இல்லை என்றும் கூறப்படுகிறது. அதேநேரம் கூகிள் போன்ற பல்வேறு நிறுவனங்களும் செயற்கை நுண்ணறிவு குறித்த ஆய்வில் இறங்கியுள்ளதால் விரையில் அதன் தரம் பெரிய அளவில் உருவாகும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் செயற்கை நுண்ணறிவின் தந்தையாகக் கருதப்படும் ஜெஃப்ரி ஹின்டன் செயற்கை நுண்ணறிவு குறித்து அச்சம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், செயற்கை நுண்ணறி தற்போதைய நிலையில் மனிதர்களை விட புத்திசாலிகளாக இல்லாவிட்டாலும், விரைவில் அவை நம்மை விட புத்திசாலிகளாக மாறும். அப்போது நாம் அச்சப்படவேண்டும் என்று கூறியிருந்தார்.
மேலும், Chat GPT போன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அதிக அளவில் பயன்பாட்டுக்கு வந்தால் அவை மனிதனின் வேலைகளை எளிதாக பார்க்கத் தொடங்கும் என்றும், இதனால் கோடிக்கணக்கான பொதுமக்கள் தங்கள் வேலைகளை இழப்பார்கள் என்றும் பல்வேறு நிபுணர்களும் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எதிர்காலத்தில் மனிதர்களின் வேலைவாய்ப்பை பறிக்காது என Chat GPT மென்பொருளை உருவாக்கிய OPEN AI நிறுவன உரிமையாளர்களின் ஒருவரான சாம் ஆல்ட்மேன் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “எதிகாலத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்களின் வேலையே பறிக்கும் என கூறமுடியாது. தற்போது பல நிறுவனங்கள் அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தினாலும், அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேண்டுமானால் ஒரு ஆராட்சியாளரின் உதவியாளரைப் போலதான் செயல்படும்” என்று கூறியுள்ளார்.