MRI ஸ்கேனர் செயலிழப்பால் அவதியில் அனுராதபுர வைத்தியசாலை நோயாளர்கள்
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் உள்ள எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரம் இயங்காததால் நோயாளர்களை வேறு வைத்தியசாலைகளுக்கு அனுப்ப வைத்தியசாலை அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
செய்தி நிறுவனத்திடம் பேசிய மருத்துவமனை பணிப்பாளர் டி.எம்.எஸ். சமரவீர, “இறுதிப் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதால், இயந்திரத்தை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளோம்,” என்றார்.
“கடந்த இரண்டு மாதங்களாக பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன, இப்போது நாங்கள் இறுதி கட்டத்தில் இருக்கிறோம். இயந்திரத்தை சரிசெய்ய பல மாற்று பாகங்கள் இறக்குமதி செய்யப்பட வேண்டும். ஆனால் இங்குள்ள பிரச்சினை என்னவென்றால், சப்ளையர் தரப்பில் கணிசமான தாமதம் ஏற்பட்டுள்ளது.
செயலிழந்த எம்ஆர்ஐ ஸ்கேனர் காரணமாக நோயாளர்கள் சிரமங்களை எதிர்நோக்குகின்றார்களா என வினவியபோது, ஸ்கேன் பரிசோதனைக்கு வருபவர்கள் குருநாகல் மற்றும் பொலன்னறுவை போன்ற வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, அநுராதபுரம் வைத்தியசாலையின் எம்ஆர்ஐ ஸ்கேனர் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக செயலிழந்துள்ளதாகவும், நோயாளிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.