கூட்டுறவு காப்புறுதி தலைவரை சுட்டுக்கொன்ற நான்கு சந்தேக நபர்கள் கைது
மீகொட வல்பிட்ட பிரதேசத்தில் கூட்டுறவு காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் கிளையின் தலைவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பணத்திற்கான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
62 வயதான தர்ஷன சமரவிக்ரம, ஜூன் 05 ஆம் திகதி வல்பிட்ட கெமுனு மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்து ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
62 வயதுடைய நபர் வல்பிட்ட கெமுனு மாவத்தைக்குள் நுழைந்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் கைத்துப்பாக்கியால் நான்கு துப்பாக்கிச் சூடு நடத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர் பத்தரமுல்லையில் உள்ள கூட்டுறவு காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் கிளையின் புதிய தலைவராக பொறுப்பேற்கச் சென்றிருந்த நிலையில், காப்புறுதி நிறுவன கிளையின் முன்னாள் தலைவர் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், சந்தேகத்திற்குரிய முன்னாள் தலைவரின் நெருங்கிய சகாவான மாத்தறையில் உள்ள கூட்டுறவு காப்புறுதிக் கூட்டுத்தாபன கிளையின் தலைவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்துவதற்கான ஒப்பந்தத்தை வழங்கியுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதன்படி, மாத்தறை கூட்டுறவு காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் கிளை தலைவர் உட்பட மூவர் மீகொட பொலிஸாரால் இன்று (11) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் பஸ் உரிமையாளர், பஸ் நடத்துனர் மற்றும் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.