சுற்றுலா சென்ற இடத்தில் தனியாக சிக்கிக்கொண்ட 10 வயது ஆசிய சிறுமி
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் மலைப்பகுதி ஒன்றில் தனியாக சிக்கிய 10 வயது ஆப்கானிஸ்தான் சிறுமியை 24 மணி நேரத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
அமெரிக்காவின் கிட்டிடாஸ் மாவட்டத்தில் உள்ள புறநகர் பகுதி ஒன்றில் ஞாயிறன்று குடும்பத்தினர் பலருடன் சுற்றுலாவுக்கு சென்றுள்ளார் தொடர்புடைய சிறுமி. Cle Elum நதியின் மீதுள்ள பாதசாரிகளுக்கான பாலத்தில் அனைவரும் கடக்கும் போது சிறுமி ஷுங்லா மஷ்வானி தொலைந்து போயுள்ளதை குடும்பத்தினர் கண்டறிந்துள்ளனர்.
கிட்டிடாஸ் மாவட்டமானது சியாட்டிலுக்கு கிழக்கே 85 மைல் தொலைவில் அமைந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் குடியேறிய இந்த குடும்பம், மலைப்பகுதியில் தான் வசித்து வந்துள்ளது.தங்கள் நாட்டில் குடியிருக்கும் சூழலை அது தருவதாக, இந்த குடும்பம் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே பாதசாரிகள் பாலத்தை சிறுமி ஷுங்லா மஷ்வானி கடக்கவில்லை என்பதை உறுதி செய்ததும், சுமார் 20 பேர்கள் கொண்ட அந்த குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
சுமார் 2 மணி நேரம் அப்பகுதி முழுவதும் தீவிரமாக தேடியுள்ளனர். மொபைல் சேவையும் அப்பகுதியில் இல்லை என்பதால், இக்கட்டான சூழலில் தவித்த அந்த குடும்பத்தினருக்கு வழிபோக்கர் ஒருவர் செயற்கைக்கோள் தொலைபேசி ஊடாக பொலிசாரை தொடர்புகொள்ள உதவியுள்ளார்.இதனையடுத்து, பொலிஸார், தன்னார்வலர்கள் என ஒரு குழு களமிறங்கியதுடன், ட்ரோன் விமானம் மற்றும் ஹெலிகொப்டரும் தேடுதல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டது.
மலைப்பகுதி, மிகவும் ஆபத்தான பகுதி என்பதாலும், தேடுதல் நடவடிக்கை மெதுவாகவே முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், திங்கட்கிழமை மதியத்திற்கு மேல் சுமார் 3 மணிக்கு, குறித்த சிறுமியை தன்னார்வலர்கள் இருவர் கண்டுபிடித்துள்ளனர்.இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சிறுமியை குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.