கல்வி மறுசீரமைப்புக்கு சஜித் ஆதரவு: காலாசாரத்தை பாதுகாக்குமாறும் வலியுறுத்து!
“கல்வி சீர்திருத்தம் என்ற போர்வையில் இலவசக் கல்வியில் மனித வாழ்வியலுக்குப் பொருத்தமற்ற விடயங்கள் புகுத்தப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.”
இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கரவால் C.W.W. Kannangar இலங்கையில் இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. அது இன்றைய காலத்திற்கேற்றாற்போல் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
கல்வி முறையானது நவீனத்துவம் மற்றும் புத்தாக்க ரீதியாக சீர்திருத்தப்பட வேண்டும்.
செயற்கை நுண்ணறிவு உட்பட பாரிய புரட்சிகர தொழில்நுட்ப மாற்றங்கள் மிக விரைவான வேகத்தில் நடைபெற்று வரும் தருணத்தில், இந்த மாற்றங்களுடன் நாம் மாறவில்லை என்றால், பல தசாப்தங்களுக்கு பின்தங்கிய ஒரு நாடாக நாம் மாறுவோம்.
எனவே, நாட்டில் கல்வி முறையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று நானும் கருதுகிறேன்.
இலவசக் கல்வியை மாற்றியமைக்கும் செயல்முறையில், நமது மரபு, நமது நாட்டின் நாகரிகம், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். வரலாறுப் பாடத்தைக் கட்டாய பாடமாக ஆக்க வேண்டும்.
ரோபாட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவைப் போலவே, நாகரிகம் மற்றும் விழுமியங்களை நாம் மறந்து விடக்கூடாது .
நமது நாட்டுக்கு தனித்துவமான கலாச்சாரமொன்று காணப்படுவதனால், இந்த மாற்றங்களை நாகரிகத்தின் அடிப்படையில் செய்ய வேண்டும்.” – என்றார் சஜித்.





