6 ஆம் திகதி கூடுகிறது அதிஉயர் சபை: அவசரகால சட்டம், தெரிவுக்குழு பற்றி ஆராய்வு!
புத்தாண்டில் முதலாவது நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.
6 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள சபை அமர்வுகளின்போது முக்கியத்துவமிக்க பல விடயங்கள் தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளன.
அவசரகால சட்டத்தை மேலும் நீடிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் நாடாளுமன்ற அமர்வில் இது தொடர்பில் விவாதிக்கப்பட்டு, அங்கீரிக்கப்படவுள்ளது.
அத்துடன், மாகாணசபைத் தேர்தலை எந்த முறைமையின்கீழ் நடத்துவது என்பது தொடர்பில் ஆராய்வதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்ககோரும் பிரேரணை குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
மேலும் சில சட்டமூலங்கள் தொடர்பிலும் விவாதம் நடத்தப்பட்டு, தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன.
டித்வா புயல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்குமாறு எதிரணிகள் கோரியுள்ளன.
இது தொடர்பில் சபாநாயகரிடம் கடிதம் கையளிக்கப்பட்டது. அது தொடர்பில் சபாநாயகர் 6 ஆம் திகதி தெளிவுபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டித்வா புயல் தொடர்பிலும் முன்கூட்டியே எச்சரக்கை விடுக்கப்பட்டதா, இது தொடர்பில் எங்கு தவறிழைக்கப்பட்டுள்ளது என்பதை பற்றி ஆராயவே தெரிவுக்குழு கோரப்பட்டுள்ளது.
அதேவேளை, பிரதான கட்சிகளின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் 5 ஆம் திகதி கொழும்பில் நடக்கும் என தெரியவருகின்றது.





