இலங்கையில் நடைமுறைக்கு வரும் தடை! தீவிரப்படுத்தப்படும் சோதனை நடவடிக்கை
இலங்கையில் தடை செய்யப்பட்ட பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படும் இடங்களை கண்டறியும் நடவடிக்கைகள் இன்று முதல் தீவிரப்படுத்தப்படவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த வருடம் முதல் தடை செய்யப்படும் பொருட்கள் தொடர்பில் இன்று முதல் உரிய தரப்பினருக்கு அறிவிக்கப்படும் எனவும் மத்திய சுற்றாடல் அதிகார சபை தலைவர் சுபுன் எஸ்.பத்திரன குறிப்பிட்டுள்ளார்.
அ தன்படி, ஒருமுறை பயன்படுத்தி கழிக்கப்படும் பிளாஸ்டிக் ஸ்ட்ரோ மற்றும் கரண்டிகள், ஒருமுறை பயன்படுத்தும் தட்டுகள், கப் (யோகட் கப் தவிர), கரண்டி, முட்கரண்டி மற்றும் கத்திகள், பிளாஸ்டிக் மலர் மாலைகள், பிளாஸ்டிக் தயிர் கரண்டி போன்ற ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் இறக்குமதி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, பிளாஸ்டிக் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் பலமுறை தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையிலேயே குறித்த சோதனை நடவடிக்கை இன்று முதல் தீவிரப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.