காசா மனிதாபிமான நெருக்கடிகளுக்கு இடையே அமெரிக்க–இஸ்ரேல் தலைவர்கள் சந்திப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், திங்களன்று மத்திய கிழக்கு விவகாரங்கள் மீது தனது கவனத்தை செலுத்தியுள்ளார்.
அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை புளோரிடாவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பில் காசா போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் எதிர்காலம் குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காசாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறும் போரில், அமெரிக்கா இஸ்ரேலுக்கு வலுவான இராணுவ மற்றும் அரசியல் ஆதரவு வழங்கி வருகிறது.
இதனால், இந்த சந்திப்பு இரு தலைவர்களுக்கிடையேயான உறவையும், முக்கிய விவகாரங்களில் அவர்கள் எவ்வளவு ஒருமித்தமாக உள்ளார்கள் என்பதையும்
சோதிக்கும் ஒரு சந்திப்பாக பார்க்கப்படுகிறது.
ட்ரம்ப் மீண்டும் பதவியேற்றதிலிருந்து, நெதன்யாகுவுடன் ஆறாவது சந்திப்பு இதுவாகும்.
இந்த பேச்சுவார்த்தையில் சிரியாவின் புதிய அரசாங்கத்துடன் உறவுகள், ஈரான் தொடர்பான பாதுகாப்பு நிலை, லெபனானில் ஹெஸ்பொல்லாவின்
பங்கு போன்றவைவும் விவாதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் மிக முக்கியமான விவகாரம் காசா போர் நிறுத்தத்தின் எதிர்காலம் தான். இந்த விடயத்தில், அமெரிக்காவின் நிலைப்பாட்டிலிருந்து இஸ்ரேல் அரசு சில வேறுபட்ட
அணுகுமுறைகளை எடுத்துள்ளது.
இந்த சந்திப்பு நடைபெறும் நேரத்தில், காசாவில் மனிதாபிமான நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புயல்கள் மற்றும் கடும் குளிர் காரணமாக, அடிப்படை கூடாரங்களில் வாழும் லட்சக்கணக்கான இடம்பெயர்ந்த பலஸ்தீனியர்கள் கடும் துயரத்தை சந்தித்து வருகின்றனர்.
திங்களன்று, கடும் குளிர் காரணமாக இரண்டு மாத குழந்தை உயிரிழந்ததாக ஹமாஸ் கட்டுப்பாட்டிலுள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
டிசம்பர் 10 முதல் குளிர்கால காரணங்களால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. புயலால் சேதமடைந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் மேலும்
17 பேர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேல், போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் உதவி விநியோகங்களை முழுமையாக அனுமதிக்கவில்லை என ஐ.நா மற்றும் பல உதவி அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன.
ஆனால், உதவி விநியோகத்தை அதிகரித்து வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஜனவரியில் போர் நிறுத்தம் இரண்டாம் கட்டத்துக்கு செல்ல வேண்டும் என்பதே ட்ரம்ப் நிர்வாகத்தின் விருப்பமாக உள்ளது.
இந்த கட்டத்தில், சர்வதேச பாதுகாப்புப் படை, பலஸ்தீன இடைக்கால அரசு, ஹமாஸ் நிராயுதபாணியாக்கம் மற்றும் இஸ்ரேலிய படைகள் பின்வாங்குதல்
ஆகியவை இடம்பெறும் என கூறப்படுகிறது.
ஆனால், நெதன்யாகு, ஹமாஸ் முழுமையாக ஆயுதம் கைவிடாமல் இஸ்ரேலிய படைகள் காசாவிலிருந்து விலகாது என வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையெ, கடந்த வாரம் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர், காசாவில் குடியேற்றங்கள் உருவாக்கப்படும் என்றும், இஸ்ரேல் அந்த பிரதேசத்திலிருந்து முழுமையாக விலகாது என்றும் தெரிவித்தது. இந்த கருத்து போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படை நோக்கத்திற்கு முரணானதாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ட்ரம்ப் நெதன்யாகு சந்திப்பு காசா போரின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய சந்திப்பாக கருதப்படுகிறது.





