எதிரணி ஊடக சுதந்திரம் பற்றி கதைப்பது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது!
ஊடக நிறுவனங்கள்மீது தாக்குதல் நடத்தி அவற்றை கொளுத்தியவர்கள், இன்று ஊடக சுதந்திரம் பற்றி கதைப்பது “சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது” – என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் Sundaralingam Pradeep தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஊடக அடக்குமுறையைக் கையாள்வதாக எதிரணிகள் குற்றஞ்சாட்டிவருகின்றன.
இது தொடர்பில் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு.
“ கடந்த காலங்களில் ஊடக அடக்குமுறை கையாளப்பட்டது. ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டனர். ஊடக நிறுவனங்கள் கொளுத்தப்பட்டன.
இவ்வாறான செயலில் ஈடுபட்டவர்கள் இன்று ஊடக சுதந்திரம் பற்றி கதைப்பது நகைப்புக்குரிய விடயமாகும்.
எமது ஆட்சியில் ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படும். ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்குரிய உரிமைகள் நிச்சயம் பாதுக்காக்கப்படும்.
ஊடக நிறுவனங்கள் உண்மையை எழுத வேண்டும். அவ்வாறு எழுதினால் அதற்கும் பயப்பட வேண்டியதில்லை.” – என்றார் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்.





