மகாராஷ்டிராவில் நிதி நெருக்கடியால் பெற்றோரை கொன்று ரயில் முன் பாய்ந்த 2 மகன்கள்
மகாராஷ்டிராவின்(Maharashtra) நான்டெட்(Nanded) மாவட்டத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தது தொடர்பான விசாரணையில், இரண்டு சகோதரர்கள் தங்கள் பெற்றோரை வீட்டில் கழுத்தை நெரித்து கொன்று பின்னர் ரயில் முன் பாய்ந்து தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டதாக தெரியவந்துள்ளது.
நிதி நெருக்கடியால் இந்த கொலை மற்றும் தற்கொலை இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜவாலா முரார்(Jawala Murar) கிராமத்தில் உள்ள அவர்களது வீட்டில் ஒரு கட்டிலில் 51 வயது ரமேஷ் சோனாஜி லாகே(Ramesh Sonaji Laghe) மற்றும் 45 வயது மனைவி ராதாபாய் லாகே(Radhabhai Laghe) ஆகியோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
அதே நேரத்தில் அவர்களின் மகன்களான 25 வயது உமேஷ்(Umesh) மற்றும் 23 வயது பஜ்ரங்(Bajrang) ஆகியோரின் உடல்கள் கிராமத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள முகாட்(Mukat) ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டன.
“எங்கள் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கைகள், தம்பதியினர் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டில் பெற்றோரை கழுத்தை நெரித்து கொன்று, பின்னர் ஓடும் ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டதை உறுதிப்படுத்தியுள்ளன” என்று பராத் காவல் நிலைய ஆய்வாளர் தத்தாத்ரே மந்தலே(Dattatre Mandale) குறிப்பிட்டுள்ளார்.
ரமேஷ் லாகே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, நீண்டகாலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், இது குடும்பத்தில் பெரும் நிதிப் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் தத்தாத்ரே தெரிவித்துள்ளார்.





