இந்தியாவின் உதவியைப் பெற்றுக்கொண்டு மீனவர்களைச் சிறைபிடிப்பதா? ; இலங்கை கடற்படைக்கு ராமதாஸ் கண்டனம்
தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் அண்மையில் கைது செய்து, வவுனியா சிறையில் அடைத்துள்ள சம்பவத்திற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராமேசுவரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை விரட்டியடித்ததுடன், அவர்களின் வாழ்வாதாரமான விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு அண்டை நாடு என்ற முறையில் உதவி செய்வது இந்தியாவின் தார்மீக கடமை என்பதில் மாற்றுக் கருத்தில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசு பல்வேறு மறுசீரமைப்பு நிதி உதவிகளை இலங்கைக்குத் தொடர்ந்து வழங்கி வருவதையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
அதே சமயம், இந்தியாவின் உதவியைப் பெற்றுக்கொள்ளும் இலங்கை, தமிழக மீனவர்களைக் கொடூரமாகத் தாக்குவதையும் கைது செய்வதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளது என அவர் சாடியுள்ளார்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த விவகாரத்தில் கூடுதல் அக்கறை செலுத்தி, மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதற்கு முதற்கட்டமாக, இலங்கைச் சிறையிலுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.





