இலங்கை போர் குற்றவாளிகளுக்கு எதிரான தடை விரிவுப்படுத்தப்படும் – பிரித்தானிய அரசாங்கம்!
இலங்கையின் போர் குற்றவாளிகளுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடை தொடரும் என பிரித்தானிய அரசாங்கத்தின் வெளிவிவகார செயலாளர் யெவெட் கூப்பர் அறிவித்துள்ளார்.
இலங்கை போர்க்குற்றவாளிகள் மீதான அரசாங்கத்தின் தடைகளை விரிவுபடுத்துமாறு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமாரன் இங்கிலாந்து வெளியுறவுச் செயலாளரிடம் அழைப்பு விடுத்த நிலையில் யெவட் கூப்பர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் தமிழ் சமூகத்தின் நியாயமான கவலைகள் தொடர்பான “நீண்டகால பிரச்சினைகளை” நிவர்த்தி செய்வதற்கும் “நிலையான நடவடிக்கை” தேவை என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மனித உரிமைகளை மேம்படுத்துவதில் மாற்றத்தக்க நடவடிக்கை மற்றும் நீடித்த நடவடிக்கை எடுக்க இலங்கை அரசாங்கத்திற்கு நாங்கள் அழுத்தம் கொடுப்போம் எனவும் கூப்பர் எடுத்துரைத்தார்.
டிசம்பர் 16 அன்று நடந்த வெளியுறவுக் குழுக் கூட்டத்தின் போது, இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் பாரிய அட்டூழியங்களைத் தீர்ப்பதற்கு தற்போதைய இலங்கை அரசாங்கத்திடம் பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் விருப்பம் இல்லாததை உமா குமரன் நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





