தேரரின் பேஸ்புக் வீடியோவால் கடுப்பில் அர்ச்சுனா!
தையிட்டி விகாரை தொடர்பில் நாகதீப விகாரையின் விகாராதிபதி வெளியிட்டுள்ள கூற்று சிறுபிள்ளைத்தனமான அரசியலாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா Ramanathan Arjuna குற்றஞ்சாட்டினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ கோவில், விகாரை என்பவற்றை உடைத்து அரசியல் நடத்தப்படுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை. எனினும், தையிட்டி விகாரை உடைக்கப்பட வேண்டும் என்று நாகதீப விகாரையின் விகாராதிபதி கூறுகின்றார்.
முகநூல் நேரலை ஊடாகவே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
சிறுபிள்ளைத்தனமாக அரசியல் நடத்தாமல், நாட்டை முன்னோக்கி செல்வதற்கு அவர் ஆலோசனை வழங்கினால் நல்லது.
நாம் அமைதியாக பயணிக்க முற்படுகையில், விகாரையை உடைக்குமாறு தேரர் கூறுகின்றார். பிரச்சினையின்றி இதனை தீர்த்துக்கொள்வோம் என நாம் தமிழ் மக்களிடம் கூறும்போது, உடைக்குமாறு தேரர் சொல்கின்றார்.
அப்படியானால் தேரர் வந்துதான் அதனை உடைத்துக்கொடுக்க வேண்டும். அவரின் அறிவிப்பானது மக்களை குழப்பும் செயலாகும்.” – என்றார் அர்ச்சுனா எம்.பி.
எனினும், திஸ்ஸ விகாரை அமைந்துள்ள பகுதி தமிழ் மக்களினது காணியாகும், இப்பிரச்சினையை சுமுகமாகவே தீர்க்க வேண்டும் என்றே குறித்த தேரர் குறிப்பிட்டிருந்தார்.
திஸ்ஸ விகாரையை உடைக்குமாறு அவர் கூறவில்லை. ஆனால் தையிட்டியில் அமைந்துள்ள உண்மையான திஸ்ஸ விகாரை அல்ல, அது போலியானது எனவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.





