ஐரோப்பிய ஒன்றிய முன்னாள் ஆணையர் உட்பட 5 பேருக்கு விசா தடை
அமெரிக்க சமூக வலைதளங்களில் வலதுசாரி கருத்துக்களைத் தணிக்கை செய்யத் தூண்டியதாகக் கூறி, ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னாள் ஆணையர் தியரி பிரெட்டன் (Thierry Breton) உள்ளிட்ட ஐந்து பேருக்கு அமெரிக்கா விசா தடை விதித்துள்ளது.
அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் பேச்சுரிமைக்கு எதிராக ‘தணிக்கை வேட்டையை’ நடத்தியதாக இவர்களைச் சாடியுள்ள அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ, இராஜதந்திர ரீதியிலான கடும் நடவடிக்கையை அறிவித்துள்ளார்.
ஐரோப்பாவின் டிஜிட்டல் சேவைச் சட்டத்தின் (DSA) பின்னணியில் இருந்த தியரி பிரெட்டன், எலான் மஸ்க்கின் ‘X’ தளத்திற்கு எதிராகக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தடையை ‘வேட்டையாடும் செயல்’ என பிரெட்டன் விமர்சித்துள்ள நிலையில், அமெரிக்காவின் இறையாண்மைக்கு எதிராகச் செயல்படும் வெளிநாட்டு சக்திகளுக்கு விசா கிடையாது என ட்ரம்ப் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
பிரித்தானியாவைச் சேர்ந்த டிஜிட்டல் வெறுப்புணர்வு எதிர்ப்பு மையத்தின் (CCDH) தலைவர் இம்ரான் அகமது மற்றும் ஹேட்எய்ட் (HateAid) அமைப்பைச் சேர்ந்தவர்களும் இந்தத் தடைப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.





