கிரீன்லாந்தை அடைய துடிக்கும் ட்ரம்ப் – கைக்கொடுக்கும் புதிய தூதர்!
கிரீன்லாந்திற்கு சிறப்பு தூதர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க விரும்புவதாக கூறி ட்ரம்ப் மீளவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
லூசியானாவின் குடியரசுக் கட்சி ஆளுநரான ஜெஃப் லாண்ட்ரியின் புதிய பங்கு குறித்து பிபிசி ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு” கிரீன்லாந்து தேவை என்றும் “நாம் அதைப் பெற வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.
டென்மார்க் இராச்சியத்தின் அரை தன்னாட்சிப் பகுதியான கிரீன்லாந்திற்கான சிறப்புத் தூதராக லாண்ட்ரி “பொறுப்பை வழிநடத்துவார்” எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதற்கிடையே இது தொடர்பில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜெஃப் லாண்ட்ரி, “கிரீன்லாந்தை அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாற்ற தன்னார்வ நிலையில் பணியாற்றுவது ஒரு மரியாதை” என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை கோபன்ஹேகனை (Copenhagen) கோபப்படுத்தியுள்ளது. ட்ரம்பின் கூற்றுக்கள் குறித்து விளக்கம் கேட்க அமெரிக்க தூதரை அழைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
“நமது எதிர்காலத்தை நாமே தீர்மானிக்க வேண்டும்” என்றும் அதன் “பிராந்திய ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டும்” என்றும் கிரீன்லாந்தின் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.





