இலங்கையை மீளக்கட்யெழுப்ப 450 மில்லியன் டொலர்களை வழங்குகிறது இந்தியா!
பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்குரிய நிதி உதவி திட்டத்தை இந்தியா இன்று (23) அறிவித்துள்ளது.
இதற்கமைய 450 மில்லியன் டொலர் நிதி வழங்கப்படும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
350 மில்லியன் டொலர் சலுகை கடனாகவும், 100 மில்லியன் டொலர் கொடையாகவும் இலங்கைக்கு வழங்கப்படும்.
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் நேற்று (22) மாலை இலங்கை வந்தடைந்தார்.
இன்று (23) காலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து பேச்சு நடத்தினார்.
அதன்பின்னர் இலங்கை மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் இணைந்து இலங்கை வெளிவிவகார அமைச்சில் கூட்டு செய்தியாளர் மாநாட்டை நடத்தினர்.
இதன்போது பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா வழங்கிய உதவிகளுக்கு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நன்றி தெரிவித்தார்.
அதன்பின்னர் கருத்து வெளியிட்ட இந்திய வெளிவிவகார அமைச்சர், இந்திய பிரதமரின் சிறப்பு தூதுவராகவே தான் கொழும்பு வந்தார் எனவும், பிரதமரின் கடிதம் ஜனாதிபதி அநுரவிடம் இன்று கையளிக்கப்பட்டது எனவும் அவர் கூறினார்.
பேரிடர் காலத்தில் இலங்கைக்காக இந்தியாவால் வழங்கப்பட்ட ஒத்துழைப்புகள் பற்றியும் அவர் தெளிவுபடுத்தினார்.





