டென்மார்கின் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிக்க வேண்டும் – அமெரிக்க தூதரிடம் வலியுறுத்தல்!
கிரீன்லாந்திற்கான அமெரிக்க சிறப்புத் தூதராக லூசியானா (Louisiana) ஆளுநர் ஜெஃப் லாண்ட்ரி (Jeff Landry ) நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் “டென்மார்க் இராச்சியத்தின் பிராந்திய ஒருமைப்பாட்டை” மதிக்க வேண்டும் என்று டேனிஷ் வெளியுறவு அமைச்சர் இன்று வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற சில தினங்களில் டென்மார்கின் ஆளுகைக்கு உட்பட கிரீன்லாந்தை கைப்பற்றுவது தொடர்பில், அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
கனிம வளம் மிக்க, மூலோபாய ரீதியாக அமைந்துள்ள ஆர்க்டிக் தீவின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இராணுவப் படையை பயன்படுத்துவது தொடர்பிலும் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கிடையே கடந்த மார்ச் மாதம் கிரீன்லாந்தில் உள்ள ஒரு தொலைதூர அமெரிக்க இராணுவத் தளத்திற்குச் சென்ற துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) டென்மார்க் அங்கு குறைந்த அளவில் முதலீடு செய்வதாக குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் லூசியானா ஆளுநர் ஜெஃப் லாண்ட்ரியை கிரீன்லாந்திற்கான சிறப்புத் தூதராக நியமித்த ட்ரம்ப், கிரீன்லாந்து நமது தேசிய பாதுகாப்பிற்கு எவ்வளவு அவசியம் என்பதை ஜெஃப் புரிந்துகொள்கிறார்.
மேலும் நமது நட்பு நாடுகளின் பாதுகாப்பு, மற்றும் உயிர்வாழ்விற்கான நலன்களை வலுவாக முன்னெடுப்பார்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்தே டேனிஷ் வெளியுறவு அமைச்சரின் கருத்துக்கள் வந்துள்ளன.





