நத்தார் தினத்தில் கடும் குளிர் மற்றும் உறைபனி: வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள புதிய தகவல்
பிரித்தானியாவில் இந்த ஆண்டு நத்தார் தினத்தில் பரவலான பனிப்பொழிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு ஐரோப்பாவிலிருந்து வீசும் கடும் குளிர்காற்று காரணமாக இந்த வாரம் வெப்பநிலை பெருமளவு குறைந்தாலும், வளிமண்டலத்தில் நிலவும் உயர் அழுத்தம் காரணமாக மேகமூட்டமான வறண்ட வானிலையே நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், ஸ்கொட்லாந்து மற்றும் இங்கிலாந்தின் சில உயரமான மலைப்பகுதிகளில் லேசான பனிப்பொழிவு காணப்படலாம். தொழில்நுட்ப ரீதியாக நத்தார் தினத்தின் 24 மணிநேரத்தில் ஏதாவது ஒரு இடத்தில் ஒரு பனித்துளி விழுந்தாலும் அது ‘white Christmas’ ஆக கருதப்படும் என்பதால், சிறிய அளவிலான வாய்ப்புகள் இன்னும் உள்ளதாக மெட் அலுவலகம் (Met Office) தெரிவித்துள்ளது.
பனிப்பொழிவை விட, பெரும்பாலான இடங்களில் நத்தார் தினத்தன்று உறைபனி மற்றும் மூடுபனி அதிகமாகக் காணப்படும் என்றும், அண்மையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இது ஒரு நிம்மதியான செய்தியாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





