ஒடிசா ரயில் விபத்து – கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதமர்
ஒடிசா ரயில் விபத்துக்கான உண்மை காரணம் கண்டறியப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஒடிசாவில் நேற்று முன்தினம் இரவு மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டையே வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
3 ரயில்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி பெரும் விபத்துக்குள்ளானதில் 261 பேர் பலி மற்றும் 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து நடந்த இடத்திற்கு பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்தார்.
இதனையடுத்து அவர் மீட்புப்பணிகள் குறித்தும் அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதன்பிறகு கட்டாக் மருத்துவமனையில் காயமடைந்தவர்களிடம் பிரதமர் மோடி நேரில் நலம் விசாரித்தார். இதையடுத்து பேசிய பிரதமர், இந்த விபத்து சம்பவம் நெஞ்சையே வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் வழங்க ஒன்றிய அரசு உதவும், இந்த ரயில் விபத்து மிகவும் தீவிரமான ஒன்று. இதற்கான உண்மை காரணத்தைக் கண்டறிய அனைத்து வித கோணங்களிலும் விரிவான விசாரணை நடத்தப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.