ஒடிசா ரயில் விபத்திற்கான காரணம் வெளியாகியது!
இதுவரை 280 பேரைக் காவுக் கொண்ட ஒடிசா ரயில் விபத்து குறித்த காரணம் தெரியவந்துள்ளது.
இதன்படி, முதற்கட்ட விசாரணையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் லைன் மாறி சென்றதுதான் இந்த கோர விபத்துக்கு முக்கிய காரணம் என தகவல் தெரிவிப்பதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
பஹனாகா பஜார் ரெயில் நிலையம் அருகே நான்கு ரெயில் தண்டவாளங்கள் உள்ளன. அதில் ஒன்று லூப் லைன். லூப் லைன் ரெயில் நிலையம் அருகே மற்ற ரெயில்களுக்கு வழி விடவும், ரெயில்கள் எளிதாக சென்று வருவதற்காகவும் அமைக்கப்படும்.
அந்த லூப் லைன் சுமார் 750 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். அந்த லூப் லைனில் தான் சரக்கு ரயில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. மெய்ன் லைனில் வரக்கூடிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் திடீரென லூப் லைன் வழியாக வந்த ரயில், சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
அந்த விபத்தில் தடம் புரண்ட பெட்டிகள் மற்றொரு தண்டவாளத்தில் சரிந்து விழுந்ததால் அந்த வழியாக 116 கி.மீட்டர் வேகத்தில் வந்த பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ், தடம் புரண்ட கோரமண்டல் ரெயில் பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனால்தான் இந்த கோர விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.