இலங்கை – பாகிஸ்தான் தொடர்! திட்டமிட்டபடி நடத்த இலங்கை கிரிக்கெட் அமைப்பு வலியுறுத்தல்
இலங்கை – பாகிஸ்தான் சுற்றுத்தொடரை திட்டமிட்டவாறு நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அமைப்பு அணியின் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.
பாகிஸ்தான் சென்றுள்ள இலங்கை குழாமைச் சேர்ந்த வீரர்கள் பலர் தாம் நாடு திரும்ப விரும்புவதாகக் கூறியிருக்கிறார்கள்.
இஸ்லாமாபாத் நகரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து அணியின் வீரர்கள் பலர் நாடு திரும்ப விரும்புகிறார்கள் என அணியின் அதிகாரிகள் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிடம் முறையிட்டிருந்தார்கள்.
இதுபற்றி பாகிஸ்தானிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இலங்கை வீரர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தமது ஆலோசனைகளைப் பொருட்படுத்தாமல் எந்தவொரு வீரரேனும் நாடு திரும்பத் தீர்மானித்தால், அவருக்குப் பதிலாக மாற்று வீரர்களை அனுப்பி வைக்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தயாராக இருக்கிறது என அதன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி நாளை நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி இன்று நடைபெறுவதாக இருந்த நிலையில் மாற்றப்பட்டுள்ளது.





