சீர்குலையும் உக்ரைன் – புட்டினுக்குக் கடும் அழுத்தம் கொடுக்க ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை
ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர, ரஷ்யாவுக்குக் கடும் அழுத்தம் கொடுக்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யாவை இணங்க வைக்க முடியும் என ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் அனிதா ஹிப்பர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், அதனை நிறுத்த உலக நாடுகள் கடும் அழுத்தம் கொடுத்து வருகின்றன.
இவ்வாறான நிலையில், உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்புகள் மீது தொடர்ந்தும் தாக்குதல் மேற்கொண்டு வரும் ரஷ்யாவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அணுமின் நிலையங்களுக்கு வழங்கும் துணை மின்நிலையங்கள் உட்பட முக்கியமான எரிசக்தி கட்டமைப்புகளைக் குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.
இதன் மூலம் மின்சாரம், நீர் மற்றும் வெப்பமூட்டும் சேவைகளைச் சீர்குலைப்பதாகவும், அணுசக்தி பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்துவதாகவும் ஹிப்பர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய நிலையில், உக்ரைனுக்கு எரிசக்தி உதவிகளை வழங்குவதற்காக நட்பு நாடுகளுடன் இணைந்து ஆதரவு திரட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் அனிதா ஹிப்பர் குறிப்பிட்டுள்ளார்.
புட்டின் பேச்சுவார்த்தை மேசைக்கு வருவதை உறுதிசெய்ய, அவர் மீது அழுத்தத்தை அதிகரிப்பதற்கான புதிய வழிமுறைகள் மற்றும் வழிகளில் நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.”
எனினும், ரஷ்யாவினால் மேற்கொள்ளப்படும் தடைகள் காரணமாகச் சமாதானப் பேச்சுவார்த்தைக்கான காலத்தை நிர்ணயிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





