ஆண்டுக்கு 400 மில்லியன் டன் பிளாஸ்டிக் உற்பத்தி – ஆபத்து குறித்து எச்சரிக்கும் இலங்கை அமைச்சர்
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 400 மில்லியன் டன்னுக்கும் அதிகமான பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.
இந்தப் பிளாஸ்டிக் உற்பத்தி சுற்றுச்சூழல் மாசுபாடு, பொருளாதாரம், சுகாதாரம் மற்றும் எதிர்காலச் சந்ததியினருக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவதாக சுற்றுச்சூழல் அமைச்சர் கலாநிதி தம்மிக பட்டபெந்தி தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையிலுள்ள வோட்டர்ஸ் எட்ஜ் (Water’s Edge) வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.
பிளாஸ்டிக் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் முறையான பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஏற்கனவே ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சட்டங்கள் மட்டும் போதுமானவை அல்ல. அரசாங்கத்தின் பசுமைக் கொள்கைகளுக்கு மக்களின் ஆதரவு கிடைக்கும்போதுதான் உண்மையான மாற்றம் ஏற்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
அத்துடன், தற்போது தேசியக் கழிவு மேலாண்மைச் செயற்திட்டம் (National Waste Management Action Plan) நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.





