ரில்வின் சில்வா இந்தியாவுக்குப் பயணம் – இராஜதந்திர நகர்வில் புதிய அத்தியாயம்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதான பங்காளிக்கட்சியான ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளார் என தெரியவருகின்றது.
இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கிய இணையதளமொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
ரில்வின் சில்வா அண்மையில் மூன்று வாரங்கள் பயணம் மேற்கொண்டு சீனா சென்றிருந்தார். அங்கு முக்கியத்துவமிக்க சந்திப்புகளை நடத்தி இருந்தார்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இந்தியா செல்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி விஜயத்தின்போது அந்தநாட்டு அதிகாரிகளுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியாவின் அதிகாரப்பூர்வ அழைப்பின் பேரில் அவர் செல்கின்றாரா அல்லது கட்சியொன்றின் அழைப்பின் பிரகாரம் செல்கின்றாரா என்பது பற்றி இன்னும் தகவல் வெளியாகவில்லை. எனினும், இலங்கைக்கான இந்திய தூதுவர், ரில்வின் சில்வாவை அண்மையில் சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





