கடமை நேரத்தில் கண்ணயர்ந்து தூங்கிய அர்ச்சுனா! ஜனாதிபதி தாலாட்டு பாடினாராம்!!
நாடாளுமன்றத்தில் இன்று அர்ச்சுனா எம்.பி. கதிரையில் இருந்தவாறு தூங்கும் காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இது தொடர்பில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்துவருவதை காணமுடிகின்றது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் இன்று சபையில் முன்வைக்கப்பட்டது. அதிலுள்ள முன்மொழிவுகளை ஜனாதிபதி வெளியிட்டுவருகின்றார்.
ஆளும் மற்றும் எதிரணியை சேர்ந்த எம்.பிக்கள் சபையில் இருந்தவாறு அவற்றை செவிமடுத்துவருகின்றனர்.
எதிரணி வரிசையில் அர்ச்சுனா எம்.பியும் அமர்ந்திருந்தார். ஜனாதிபதியின் உரை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அவர் தூங்கிவிட்டார் என குறிப்பிட்டு அது தொடர்பான காணொளி வெளியிடப்பட்டுள்ளது.
இது தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. நெட்டிசன்களால் மீம்ஸ்களும் உருவாக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் அர்ச்சுனா எம்.பி இது தொடர்பில் விளக்கமளித்து தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
குறித்த பதிவில்,
“இந்த தடவை வடக்கு மாகாணத்துக்கு பிச்சை இல்லை. ஜனாதிபதி அவர்களின் பேச்சு புத்தகமாக தரப்பட்டிருக்கிறது. அதை சேவ் (Surf) பண்ணுவது என்று சொல்வார்கள். மேலோட்டமாக ஓடிப் பார்த்தேன். வடக்கு மாகாணத்துக்குரிய எந்த சிறப்பு நிதியும் எங்கேயும் இல்லை!
வடக்கு மாகாணத்துக்கு எந்த நிதியும் இந்த முறை பாதீடில் குறிப்பிட்ட அளவாக ஒதுக்கப்படவில்லை. போன முறை ஐயாயிரம் மில்லியன் பாதை 1500 மில்லியன் பட்டு வாகல் பாலம் என்றெல்லாம் ஏமாற்றப்பட்டோம். நூலகத்துக்கு 200 மில்லியன் என்றார்கள். இங்க இந்தத் தடவை எதுவுமே இல்லை.
போன தடவை பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஒன்பது தசம் மூன்று மில்லியன் கூட பாவிக்கவில்லை. வடக்குக்காக ஒதுக்கப்பட்ட 5000 மில்லியன் பாவிக்கப்படவுமில்லை. திருப்பி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
திருப்பி கிடைக்கப் போவதுமில்லை. நித்திரை கொல்லாமல் வேறு என்ன செய்வது. ஒரு பாயும் தலவாணியும் இருந்தால் நீட்டி நிமிர்ந்து படுத்திருப்பேன். பெரிய ஆசையுடன் பாராளுமன்றத்திற்கு காலையிலேயே வந்திருந்தேன். எல்லாம் புஸ்வாணம். மிகப்பெரிய ஏமாற்றம். இடையில் எழும்பி போனால் சரியில்லை தானே!! எனக் குறிப்பிட்டுள்ளார்.





