பிரித்தானியாவில் புகலிட விடுதிகளில் இருந்து கணிசமான தொகை வசூலிப்பு!
பிரித்தானியாவில் புகலிட விடுதிகளை நடத்தும் நிறுவனங்கள் ஈட்டிய அதிகப்படியான லாபத்திலிருந்து அரசாங்கம் £74 மில்லியன்களை வசூலித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
தொழிற்கட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தப்பின் ஒப்பந்தங்கள் மறு ஆய்வு செய்யப்பட்டு மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக உள்துறை அலுவலகம் கூறியுள்ளது.
தங்குமிட வழங்குநர்கள் தங்கள் ஒப்பந்த விதிமுறைகளின் கீழ், அரசாங்கத்திற்கு சில லாபங்களைத் திருப்பித் தருவதாக முன்னர் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தனர். இதற்கமையவே மேற்படி பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
ஆனால் திரும்பப் பெறப்பட்ட தொகை புகலிட விடுதிகளுக்கான ஒட்டுமொத்த செலவில் ஒரு சிறிய சதவீதமாகவே உள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2024 -2025 வரை ஒட்டுமொத்தமாக £2.1 பில்லியன் செலவிடப்பட்டுள்ளதாகவும், ஒரு நாளைக்கு சராசரியாக £5.77 மில்லியன் செலவிடப்பட்டுள்ளதாகவும் உள்துறை அலுவலகத்தின் புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
இந்த தரவுகளின்படி, அரசாங்கம் புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்குவதற்கு செலவிட்ட பணத்தை விட குறைந்த அளவிலான பணமே மீட்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





