விதிமீறலில் ஈடுபட்டால் சிறை ; சமூக ஊடக பிரபலங்களுக்கு பிரான்ஸ் எச்சரிக்கை
சமூக ஊடக பிரபலங்களைக் கட்டுப்படுத்தும் சட்டம் ஒன்று பிரான்சில் நிறைவேற்றப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, விதிமீறலில் ஈடுபடுவோர் சிறை செல்ல நேரிடலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிகள், போலியான அல்லது தவறாக வழிநடத்தும் செய்திகள் மூலம் ஏமாற்றப்படுவதிலிருந்து நுகர்வோரை பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளன.
லொட்டரி, சூதாட்டம், புகையிலை விளம்பரம் போன்றவற்றை ஊக்குவிப்பதை அந்த விதிகள் கட்டுப்படுத்துகின்றன.ஆகவே, சமூக ஊடக பிரபலங்கள், தங்கள் தளத்தை சிறுவர்களால் பார்க்கமுடியாது என்னும் நிலை இருந்தாலன்றி, லொட்டரி, சூதாட்டம், புகையிலை போன்றவற்றிற்கு விளம்பரம் செய்யமுடியாது.
அத்துடன், அழகியல் அறுவை சிகிச்சைகள், சில நிதி தயாரிப்புகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றிற்கும் விளம்பரம் செய்ய தடைசெய்யப்பட்டுள்ளது.விதிகளை மீறுவோருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 300,000 யூரோக்கள் வரை அபராதமும் விதிக்கப்படும்.
பிரான்சில் 150,000க்கும் அதிகமான சமூக ஊடகப் பிரபலங்கள் உள்ளதாக பொருளாதார, நிதி மற்றும் டிஜிட்டல் இறையாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரச்சினை என்னவென்றால், பிரான்ஸ் சமூக ஊடகப் பிரபலங்கள் பலர் பிரான்சில் இல்லை. ஆகவே, விதிமீறலில் ஈடுப்பட்டால், எப்படி அவர்களை தண்டிப்பது என்பது கேள்விக்குறியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.