அம்பலாங்கொடையில் துப்பாக்கிச்சூடு – வர்த்தகர் மரணம்!
																																		அம்பலாங்கொடை நகர சபை வளாகத்திற்கு அருகில் இன்று (4) காலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
55 வயதான நிலந்த வருஷ விதான என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காரில் வந்த சந்தேக நபர்கள் குழு துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்ட நிலையில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
பின்னர் படுகாயம் அடைந்த வர்த்தகர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காவல்துறை விசாரணைகளில், பாதிக்கப்பட்டவர் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த “கரந்தெனிய சுத்தா” என்ற நபரின் உறவினர் என்பது தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க நான்கு சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெலிகம பிரதேச சபைக்குள் புகுந்து, பிரதேச சபைத் தலைவரை துப்பாக்கி தாரிகள் சுட்டுக்கொலை செய்த சம்பவம் இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது நகரசபை வளாகத்திற்கு அருகில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
        



                        
                            
