போதைப்பொருள் மாபியாக்களுக்கு முடிவு கட்டும் நடவடிக்கை ஆரம்பம் – வடக்கு மக்களுக்கு அழைப்பு!
போதைப்பொருளுக்கு முடிவு கட்டுவதற்குரிய சமர் ஆரம்பமாகியுள்ளது. இந்த சமரைக் கண்டு அஞ்ச வேண்டாம். அதற்குப் பேராதரவு தாருங்கள். வடக்கு மண்ணில் இருந்து போதைப்பொருள் மாபியாக்கள் உட்பட குற்றச் செயல்களில் ஈடுபடும் தரப்புகளைத் துடைத்தெறிவோம் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அழைப்பு விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:
“போதைப்பொருள் விற்பனையாளர்கள், கஞ்சா கடத்துபவர்கள் மற்றும் வாள்வெட்டுக் குழுவினரால் யாழ். மாவட்டம் சீரழிந்து வருகின்றது. எனவே, இவற்றுக்கு முடிவு கட்டி, சமூக நிலைமையைத் தோற்றுவிக்குமாறு யாழ். மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர். தற்போது போதைப்பொருள் கும்பல் மற்றும் பாதாள குழு உறுப்பினர்களின் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு வருகின்றது.
போதைப்பொருளுக்கு எதிரான கூட்டு நடவடிக்கை நாடு தழுவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாதாள குழு பின்னணியில் கறுப்பு நிர்வாகப் பொறிமுறையே உள்ளது. இதற்கு உதவும் சில நபர்கள் எல்லா இடங்களிலும் இருக்கவே செய்கின்றனர். இதன் பின்னணியில் கறுப்புப் பணம் புகுந்து விளையாடுகின்றது.
இந்நிலைமையைக் கண்டும், காணாததுபோல் இருக்க முடியாது. அது எமது இளைய தலைமுறைக்கு இழைக்கும் பெரும் துரோகமாகும். எனவே, கறுப்பு யுகத்துக்கு முடிவு கட்டப்படும். மக்களால் சட்டப்பூர்வமாகச் செயற்படும் அரசாங்கம்தான் நாட்டை ஆள வேண்டும். கறுப்பு உலகத்தால் நிர்வாகத்தை முன்னெடுக்க இடமளிக்க முடியாது.
மக்களுக்காகச் செயலாற்றுவதே எமது அரசாங்கத்தின் நோக்கம். ஊழல், மோசடிகளற்ற தூய நிர்வாகத்தை நோக்கிய பயணத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். குறிப்பாக அரசாங்க ஊழியர்கள் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும். அரச ஊழியர்களுக்குரிய அத்தனை வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.
போதைப்பொருளுக்கு முடிவு கட்டுவதற்குரிய சமர் ஆரம்பமாகியுள்ளது. இந்த சமரைக் கண்டு அஞ்ச வேண்டாம். அதற்குப் பேராதரவு தாருங்கள். மக்களுக்குத் தகவல் தெரியும். அதனை உரிய தரப்பினருக்கு அறிவியுங்கள். எதற்கும் அஞ்ச வேண்டாம். இளைஞர்களே முன்வாருங்கள், உங்களுக்குப் பின்னால் அரசாங்கம் நிற்கும். சண்டியர்களை நொண்டி ஆக்குவோம்,” என்றார் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர்.





