ஹிஸ்புல்லா அமைப்பிற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள இஸ்ரேல் – பரபரப்பாகும் மத்திய கிழக்கு
லெபனானில் (Lebanon) தமது படைகள் நிலைகொண்டுள்ள பகுதிகளில் ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பு, தமது ஆயுதப் பயன்பாட்டை குறைக்க வேண்டும். அவ்வாறு குறைக்காத பட்சத்தில் தக்க பதிலடி வழங்கப்படும் என இஸ்ரேல் (Israel) எச்சரித்துள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பு நெருப்புடன் விளையாடுவதாக இஸ்ரேல் (Israel) பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) எச்சரித்துள்ளார்.
லெபனானின் தெற்கில் ஆயுதங்களைக் குறைக்க வேண்டும். இதனை மீறினால் அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்படும். வடக்கில் வாழும் மக்களுக்கான அச்சுறுத்தலை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என அமைச்சர் சூளுரைத்துள்ளார்.
இஸ்ரேலுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஹமாஸ் (Hamas) அமைப்பிற்கு ஆதரவாக ஹிஸ்புல்லா செயல்பட்டு வருகிறது.
அதற்கமைய இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேலும் லெபனான் மீது தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில் கடும் அழுத்தம் காரணமாக கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரு நாடுகளுக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
எனினும் லெபனானின் தெற்குப் பகுதியில் 5 இடங்களில் தனது படைகளை இஸ்ரேல் நிலைநிறுத்தியுள்ளது. அங்கிருந்து ஹிஸ்புல்லா அமைப்பினரின் நிலைகளைக் குறிவைத்துத் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
அண்மையில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதாக லெபனானின் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





