ஜெர்மனியில் இருந்து பெருந்தொகையானவர்கள் நாடு கடத்தல்
 
																																		ஜெர்மனியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமானவர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை சுமார் 17,651 பேர் தங்கள் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு இதே மாத காலப்பகுதியில் நாடுகடத்தப்பட்டோரின் எண்ணிக்கை, இந்த ஆண்டு நாடுகடத்தப்பட்டோரின் எண்ணிக்கையை விட 20 சதவீதம் குறைவாக இருந்தது.
அரசாங்கம் நாடுகடத்தல் விதிகளை எளிதாக்கிய பின்னர் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான நாடுகடத்தல்கள் துருக்கிக்கு அனுப்பப்பட்டுள்ளன.
1,614 பேர் வரை அங்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஜோர்ஜியாவிற்கு 1,379 பேர் அனுப்பப்பட்டுள்ளனர்.
நாடுகடத்தப்பட்டவர்களில் ஐந்தில் ஒருவர் குழந்தைகள் அல்லது இளைஞர்கள் எனக் கூறப்படுகின்றது.
ஜெர்மன் நாடாளுமன்றத்தில் அரசாங்கம் சமர்ப்பித்த அறிக்கையிலிருந்தே இந்த விடயங்கள் தெரியவந்துள்ளது.
இந்த அறிக்கை ஜெர்மன் பத்திரிகை நிறுவனத்துடனும் பகிரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
        



 
                         
                            
