கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட இருந்த 700 மாணவர்கள் விவகாரத்தில் ஏற்பட்டுள் திருப்பம்
மோசடி ஒன்றில் சிக்கி, கனடாவிலிருந்து நாடுகடத்தப்படும் அபாயத்திலிருந்த 700 இந்திய மாணவர்களுக்கு ஆறுதலளிக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
இந்தியாவின் ஜலந்தரில் அமைந்துள்ள, Education Migration Services என்ற அமைப்பில், ஆளுக்கு 16 இலட்ச ரூபாய்க்கும் அதிகமான தொகையை செலுத்தி, கனடாவில் கல்வி கற்பதற்காக விசாவுக்கு விண்ணப்பித்த 700 மாணவர்களின் அனுமதி ஆஃபர் கடிதங்கள் போலியானவை என தெரியவந்ததையடுத்து, அவர்கள் கனடாவிலிருந்து நாடுகடத்தப்படும் அபாயத்திற்குள்ளானார்கள்.
இந்த மாணவர்கள், 2018 -19 காலகட்டத்தில் கனடாவுக்கு வந்துள்ளார்கள். அவர்கள் படிப்பை முடித்து, நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கோரி விண்ணப்பிக்கும்போதுதான் தாங்கள் அனைவரும் ஏமாற்றப்பட்ட விடயம் அவர்களுக்குத் தெரியவந்துள்ளது.அவர்களுடைய அனுமதி ஆஃபர் கடிதங்கள் போலியானவை என தெரியவந்ததையடுத்து, அவர்கள் நாடுகடத்தப்பட இருப்பதாக கனேடிய எல்லை பாதுகாப்பு ஏஜன்சி அவர்கள் அனைவருக்கும் கடிதங்கள் அனுப்பியது.
இந்நிலையில், அந்த மோசடியில் சிக்கிய மாணவர்களுக்கு உதவும் வகையில் கனடா அரசு நடவடிக்கைகளைத் துவக்கியுள்ளது.கனடாவின் புலம்பெயர்தல் துறை அமைச்சரான Sean Fraser, கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு இந்த மோசடி தொடர்பாக தீவிர விசாரணை நடத்திவருவதாக தெரிவித்துள்ளார்.
அரசின் நோக்கம் இந்த மோசடியின் பின்னணியிலுள்ள மோசடியாளர்களின் முகமூடிகளைக் கிழிப்பது தானேயொழிய, பாதிக்கப்பட்ட அப்பாவி மாணவர்களைத் தண்டிப்பது அல்ல என்பதை தெளிவுபடுத்தியுள்ளார் அமைச்சர்.அத்துடன், கனடாவுக்கு சர்வதேச மாணவர்கள் அளிக்கும் குறிப்பிடத்தக்க அளவிலான பங்களிப்பைத் தான் அங்கீகரிப்பதாக தெரிவித்துள்ள Sean Fraser, அவர்களுக்கு நீதி கிடைப்பதில் ஆதரவளிக்க, தான் உறுதிபூண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.