இந்தியா இனி ரஷ்ய எண்ணெயை வாங்காது – மோடியின் வாக்குறுதியை வெளிப்படுத்திய ட்ரம்ப்
ரஷ்யாவிடம் இருந்து மசகு எண்ணெயை இந்தியா கொள்வனவு செய்யாது என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi), தனக்கு உறுதியளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது அமெரிக்க ஜனாதிபதி இந்தத் தகவலை வெளியிட்டார்.
ரஷ்யாவின் எரிசக்தி வருவாயைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய ரஷ்யாவிடமிருந்து மசகு எண்ணெய் கொள்வனவு செய்வதைப் படிப்படியாகக் குறைக்கத் தீர்மானித்துள்ளது.
ரஷ்ய எண்ணெய் இறக்குமதியில் தான் மகிழ்ச்சியடையவில்லை எனவும் அதை நிறுத்துவதற்கான மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய பிரதமர் உறுதியளித்துள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அமெரிக்க ஜனாதிபதியின் கருத்தை உறுதிப்படுத்தி இந்தியா இதுவரை எந்தவித உத்தியோகபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





