தென்னாப்பிரிக்காவில் விமானி பயிற்சியின் போது விபத்தில் சிக்கி உயிரிழந்த இந்திய இளைஞர்
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் (Johannesburg) விமானி பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தில் ராஞ்சியை சேர்ந்த 20 வயது பியூஷ் புஷ்ப் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.
பியூஷ் புஷ்ப், தென்னாப்பிரிக்காவின் புகழ்பெற்ற விமானப் போக்குவரத்து அகாடமிகளில் ஒன்றான வல்கன் ஏவியேஷன் நிறுவனத்தில் (Vulcan Aviation Institute) விமானப் பயிற்சி பெற்று வந்தார்.
இந்நிலையில், நடுவானில் பயிற்சி விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் பியூஷ் படுகாயமடைந்து ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள ஒரு உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் சிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார்.
வணிக விமானியாக வேண்டும் என்ற தனது கனவைத் தொடர பியூஷ் இந்த ஆண்டு தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்கான சரியான காரணம் மற்றும் சூழ்நிலைகள் குறித்து தென்னாப்பிரிக்காவில் உள்ள அதிகாரிகள் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை. விசாரணை நடந்து வருவதாக வல்கன் ஏவியேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.





