கண்களுக்குள் ஒரு ஸ்மார்ட்போன் – மெட்டாவின் புதிய ஸ்மார்ட் கண்ணாடிகள் அறிமுகம்

மெட்டா நிறுவனம் தனது கனெக்ட் மாநாட்டில், தொழில்நுட்ப ஆர்வலர்களை வியக்க வைக்கும் வகையில் 3 புதிய ஸ்மார்ட் கண்ணாடிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மெட்டா ரே-பான் டிஸ்ப்ளே (Meta Ray-Ban Display), ரே-பான் மெட்டா ஜெனரல் 2, ஓக்லி மெட்டாவான்கார்டு கண்ணாடிகள் வெளியிடப்பட்டுள்ளன.
மெட்டா ரே-பான் டிஸ்ப்ளே (Meta Ray-Ban Display)
இந்த ஸ்மார்ட் கண்ணாடி $799 விலையில் கிடைக்கிறது. இதன் சிறப்பம்சம், வலது லென்ஸில் உள்ளமைக்கப்பட்ட முழு வண்ண, உயர் தெளிவுத்திறன் கொண்ட ஸ்கிரீன். இது தேவைப்படும்போது மட்டுமே இயங்கும், மற்ற நேரங்களில் கண்ணுக்குத் தெரியாத வகையில் இருக்கும்.
இதை எப்படி கட்டுப்படுத்துவது? இதற்காக மெட்டா நியூரோன் பேண்ட் (Meta Neural Band) என்ற புதிய சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை மணிக்கட்டில் அணிந்து கொண்டால் போதும், நம் கைவிரல்களின் அசைவுகளைப் புரிந்துகொண்டு கண்ணாடியை இயக்கும். செய்தியை பார்க்க, விரல்களால் லேசாகத் தட்டினால் போதும்; ஒரு மெனுவில் இருந்து ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க, கட்டைவிரலையும் ஆள்காட்டி விரலையும் லேசாகக் கிள்ளினால் போதும்! இத்தகைய எளிமையான சைகைகள் மூலம், மெசேஜ் பார்ப்பது, புகைப்படங்களைப் பார்ப்பது, மெட்டா ஏ.ஐயிடம் பேசுவது, மற்றும் ரூட் மேப் என அனைத்தையும் செய்ய முடியும்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
கண்ணாடியின் பேட்டரி ஒருமுறை சார்ஜ் செய்தால் 6 மணி நேரம் நீடிக்கும். அதனுடன் வரும் சார்ஜிங் கேஸ் கூடுதலாக 30 மணிநேர பயன்பாட்டை வழங்குகிறது. நியூரோன் பேண்ட் 18 மணிநேர பேட்டரி ஆயுளையும், ஐ.பி.எக்ஸ்7 வாட்டர் ரேட்டிங்கையும் கொண்டுள்ளது.
மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், விற்பனைக்கு தயாராக உள்ள தயாரிப்பு என்று உறுதியளித்துள்ளார். இது செப்டம்பர் 30 முதல் பெஸ்ட் பை, லென்ஸ்கிராஃப்டர்ஸ், மற்றும் ரே-பான் கடைகளில் கிடைக்கும்.
ரே-பான் மெட்டா ஜெனரல் 2 (Ray-Ban Meta Gen 2)
உலகம் முழுவதும் ஏற்கனவே லட்சக்கணக்கான மக்களால் விரும்பப்பட்ட ரே-பான் மெட்டா ஸ்மார்ட் கண்ணாடியின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு இது. இதன் விலை $379.
பேட்டரி & கேமரா: இதன் பேட்டரி 8 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 3K அல்ட்ரா HD வீடியோ பதிவு, அல்ட்ராவைடு HDR, 60 பிரேம்ஸ்/வினாடி வேகத்தில் வீடியோ எடுக்கும் திறன் போன்ற மேம்படுத்தப்பட்ட கேமரா அம்சங்கள் இதில் உள்ளன. சார்ஜிங் கேஸ் கூடுதலாக 48 மணி நேர பவர் வழங்குகிறது.
புதிய அம்சங்கள்: ஒருவருடன் பேசும்போது, பின்னணி இரைச்சலை நீக்கி குரலை மட்டும் தெளிவாகக் கேட்கும் “கான்வர்சேஷன் ஃபோகஸ்” அம்சம் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. ஜெர்மன், போர்த்துகீசியம் மொழிகளுக்கான நேரடி மொழிபெயர்ப்பு வசதியும் விரிவாக்கப்பட்டுள்ளது.
ஓக்லி மெட்டா வான்கார்டு (Oakley Meta Vanguard)
விளையாட்டு வீரர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த கண்ணாடியின் விலை $499.
சிறப்பம்சங்கள்: இது கார்மின் (Garmin) சாதனங்கள், ஸ்ட்ராவா (Strava) ஆப் உடன் நேரடியாக இணைந்து செயல்படுகிறது. இதன் மூலம், வீரர்கள் தங்கள் இதயத் துடிப்பு, ஓட்டத்தின் வேகம் போன்ற தகவல்களை மெட்டா ஏ.ஐ-யிடம் கேட்க முடியும்.
பேட்டரி & வடிவமைப்பு: இது 9 மணிநேர பேட்டரி ஆயுளைக் கொண்டுள்ளது. மேலும், IP67 தூசு மற்றும் நீர் எதிர்ப்புத் திறன் கொண்டது. முந்தைய மாடல்களை விட 6 டெசிபல் louder ஆக இருக்கும் இதன் ஸ்பீக்கர்கள், வேகமான காற்று சத்தத்தை குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இது அக்டோபர் 21 முதல் விற்பனைக்கு கிடைக்கும்.