கூகுள் லென்ஸ் ஏ.ஐ உடன் புதிய விண்டோஸ் செயலி அறிமுகம்!

கணினியில் வேலை பார்க்கும்போது, ஒரு தேடலுக்காகப் பல ஆப்களுக்கு இடையில் மாறி மாறி செல்வது சவாலான காரியம். ஆனால், உங்கள் பணி ஓட்டத்தை தடுக்காத புதிய செயலியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.
‘கூகுள் ஆப் ஃபார் விண்டோஸ்’ (Google app for Windows) என்ற பெயரில் வந்துள்ள இந்தச் செயலி, உங்கள் கணினியில் உள்ள பைல்கள், கூகுள் டிரைவ் பைல்கள், இன்ஸ்டால் செய்யப்பட்ட ஆப்கள் மற்றும் இணையத் தேடல்களை ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கிறது.
இந்தச் செயலியை ‘Alt+Space’ என்ற ஷார்ட்கட் மூலம் விரைவாகத் திறக்க முடியும். திறந்து பார்த்தால், ‘சர்க்கிள் டூ சர்ச்’ போன்ற ஒரு தேடல் பட்டி தோன்றும். அதில் நீங்கள் என்ன தேடினாலும், அது நொடியில் முடிவுகளைக் காண்பிக்கும்.
கூகுள் ஆப் ஃபார் விண்டோஸ் – அம்சங்கள்:
தேடல் எளிமை: MacOS-ல் உள்ள ‘ஸ்பாட்லைட் சர்ச்’ போல, கணினியில் உள்ள கோப்புகள் முதல் இணையத் தகவல்கள் வரை அனைத்தையும் ஒரே இடத்தில் தேடலாம்.
டார்க் மோட்: இரவு நேரத்தில் வேலை செய்யும் பழக்கம் உள்ளவர்களுக்கு ஏற்ற வகையில், தனி டார்க் மோட் வசதியும் உள்ளது.
ஏ.ஐ மோட்: Google-ன் ஏ.ஐ மோட் மூலம் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு விரிவான பதில்களைப் பெறலாம். தேவைப்பட்டால், AI மோடை முடக்கும் வசதியும் உள்ளது. Google Lens: உங்கள் திரையில் உள்ள எந்தப்படத்தையும் தேர்ந்தெடுத்து, அதைத் தேடலாம், கணிதப் பாடங்களுக்கு உதவலாம், அல்லது உரைகளை மொழிபெயர்க்கலாம்.
இந்தச் செயலி தற்போது அமெரிக்காவில் உள்ள ஆங்கிலப் பயனர்களுக்கு மட்டுமே சோதனை முறையில் கிடைக்கிறது. விண்டோஸ் 10 அல்லது 11 கொண்ட கணினியில் இதை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம். விரைவில் மற்ற நாடுகளிலும் இது அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.