ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய வீரர்கள் முதலிடம்

ஐசிசி டி20 கிரிக்கெட் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் வருண் சக்ரவர்த்தி முதலிடம் பிடித்துள்ளார். தரவரிசையில் அவர், முதலிடத்தை பிடிப்பது இதுவே முதன்முறையாகும்.
34 வயதான வருண் சக்ரவர்த்தி இதற்கு முன்னர் அதிகபட்சமாக 2-வது இடத்தை பிடித்திருந்தார். தற்போது அவர், 733 புள்ளிகளுடன் 3 இடங்கள் முன்னேறி நியூஸிலாந்தின் ஜேக்கப் டஃபியை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை அடைந்துள்ளார். ஜேக்கப் டஃபி கடந்த மார்ச் மாதத்தில் இருந்து டாப்பில் இருந்து வந்தார்.
34 வயதான வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா 4 இடங்கள் முன்னேறி 40-வது இடத்தையும், சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் 16 இடங்கள் முன்னேறி 23-வது இடத்தையும், ஆல்ரவுண்டரான அக்சர் படேல் ஒரு இடம் முன்னேறி 12-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் இந்தியாவின் ஹர்திக் பாண்டியா முதலிடத்தில் தொடர்கிறார். அபிஷேக் சர்மா 4 இடங்கள் முன்னேறி 14-வது
இடத்தை பிடித்துள்ளார். அதேவேளையில் பேட்டிங் தரவரிசையில் அபிஷேக் சர்மா 884 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார்.
ஷுப்மன் கில் 4 இடங்கள் முன்னேறி 39-வது இடத்தை பிடித்துள்ளர். திலக் வர்மா 2 இடங்களை இழந்து 4-வது இடத்துக்கும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஒரு இடத்தை இழந்து 7-வது இடத்துக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.